`சென்செக்ஸ்' 337 புள்ளிகள் அதிகரிப்பு

`சென்செக்ஸ்' 337 புள்ளிகள் அதிகரிப்பு
நாட்டின் பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று மிகவும் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 337 புள்ளிகள் அதிகரித்தது. இதனால் முதலீட்டாளர்கள் பங்குகள் சந்தை மதிப்பு ரூ.84,000 கோடி அதிகரித்தது.

கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இது, சென்ற சில மாதங்களாக சர்வதேச அளவில் பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், ஐரோப்பிய மைய வங்கி கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வெளிச் சந்தை நடவடிக்கை வாயிலாக கடன்பத்திரங்களை அதிக அளவில் வாங்கப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு ஏற்பட்டது. அந்நாடுகளின் பங்கு வர்த்தகத்தில் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், அமெரிக்கா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்றாக இருந்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.

சர்வதேச அளவில் பணப்புழக்கம் அதிகரித்து உலோகங்கள் விலை உயரும் என்ற நிலைப்பாட்டால் இத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது.

பாரத ரிசர்வ் வங்கி இம்மாதம் 17-ந் தேதி வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவியது. இதனால், வங்கிகளின் வட்டிச் செலவினம் குறையும் என்பதால் பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் உள்ளிட்ட பல வங்கி பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டால் வீடுகள் மற்றும் பொறியியல் சாதனங்கள் விற்பனை அதிகரிக்கும். இதனையடுத்து, ரியல் எஸ்டேட் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.

பெட்ரோலிய பொருள்கள் விலையை உடனடியாக உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்ற மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்ததையடுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவன பங்குகள் விலை குறைந்தது. இல்லையென்றால் பங்கு வர்த்தகத்தில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும்.

`சென்செக்ஸ்' கணக்கிடுவதில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், எல்-டி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை மிகவும் உயர்ந்தது.

வர்த்தகம் முடியும்போது `சென்செக்ஸ்' 337.46 புள்ளிகள் அதிகரித்து 17,683.73 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 17,701.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 17,575.79 புள்ளிகள் வரையிலும் சென்றது.

நிஃப்டி

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `நிஃப்டி' 103.70 புள்ளிகள் உயர்ந்து 5,342.10 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,347.15 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 5,309.20 புள்ளிகளுக்கும் சென்றது. இக்குறியீட்டு எண்ணை கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள், 49 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஒரு நிறுவனப் பங்கின் விலை குறைந்தும் இருந்தது.
https://goo.gl/bdeAKx


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்