நாட்டின் தங்கம் இறக்குமதி 40 சதவீதம் சரிவடையும்

நாட்டின் தங்கம் இறக்குமதி 40 சதவீதம் சரிவடையும்
நாட்டின் தங்கம் இறக்குமதி அடுத்த நான்கு மாதங்களில் (செப்டம்பர் - டிசம்பர்) சென்ற ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 40 சதவீதம் சரிவடைந்து 200 டன்னாக குறையும் என மும்பை தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கம் மதிப்பீடு செய்துள்ளது.

தங்கம் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், விவசாயிகளின் வருமானம் குறைந்து கிராமப்புறங்களில் தனிநபர் செலவிடும் வருவாய் குறையும். நாட்டின் தங்கம் விற்பனையில் கிராமங்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளதால், தங்கம் விற்பனை குறைந்து இறக்குமதி சரிவடையும் என மும்பை தங்கம் வெள்ளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதத்தில் தங்கம் இறக்குமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 40 டன் குறைந்துள்ளது. இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் (ஜனவரி-ஜுலை) தங்கம் இறக்குமதி 445 டன்னாகத்தான் உள்ளது. எனவே, இவ்வாண்டில் தங்கம் இறக்குமதி கடந்த 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் (969 டன்) 28 சதவீதம் சரிவடைந்து 700 டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வர்த்தக பற்றாக்குறை உயர்ந்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதியே முக்கிய காரணமாகும். தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் உலக அளவில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதன் இறக்குமதி மீதான வரியை இரண்டு மடங்கு உயர்த்தியது. இதுபோன்ற காரணங்களால் இவ்வாண்டில் தங்கம் இறக்குமதி மிகவும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச சந்தைகளில் தங்கம் விலை குறைந்து, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தால் இந்தியாவில் தங்கம் விற்பனை உயர்ந்து இறக்குமதியில் முன்னேற்றம் ஏற்படும் என கோத்தாரி தெரிவித்துள்ளார்.

வெள்ளி

சர்வதேச அளவில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஓர் ஆண்டு காலத்தில் அமெரிக்க டாலருக்க நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சுமார் 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதனால், இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளது. எனவே, இவ்வாண்டில் வெள்ளி இறக்குமதி கடந்த ஆண்டைக் காட்டிலும் 36 சதவீதம் சரிவடைந்து 4,700 டன்னிலிருந்து 3,000 டன்னாக குறையும் என கோத்தாரி மேலும் கூறியுள்ளார்.

ஜுன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் சர்வதேச அளவில் தங்கம் விற்பனை 7 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், இதே காலாண்டில் உலகின் மைய வங்கிகள் 158 டன் தங்கம் வாங்கியுள்ளன. இது, சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் (66 டன்) இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல்-ஜுன் மாத காலத்தில் உலக அளவில் 990 டன் தங்கம் விற்பனையாகி உள்ளது. இதில், உலகின் மைய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் அளவு 16 சதவீதமாகும்.

கடன் நெருக்கடி

கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. அமெரிக்க பொருளாதாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, அமெரிக்க டாலர் மற்றும் ஐரோப்பாவின் ïரோ ஆகியவற்றில் முதலீடு செய்வதைக் காட்டிலும் தங்கம் கையிருப்பை அதிகரிக்கவே உலக நாடுகள் விரும்புகின்றன.

உலக அளவில் மைய வங்கிகளிடம் மொத்தம் 31,353 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இதில், அமெரிக்காவிடம் உள்ள தங்கம் கையிருப்பு மட்டும் 26 சதவீதம் (8,133 டன்) என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு நிதியம்

கடந்த 2009-ஆம் ஆண்டில் பாரத ரிசர்வ் வங்கி பன்னாட்டு நிதியத்திடமிருந்து 200 டன் தங்கம் வாங்கியது. தற்போது ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 558 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. இது, அன்னியச் செலாவணி கையிருப்பில் 10 சதவீதமாகும். உலகில் அதிக தங்கம் கையிருப்பு வைத்துள்ள 100 நாடுகளில் இந்தியா 11-வது இடத்தில் உள்ளது.
https://goo.gl/LBDKJU


10 May 2017

எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைப்பு

10 May 2017

ரயில் டிக்கெட்டுகள் கேஷ் ஆன் டெலிவரி - ஐஆர்சிடிசி அறிவிப்பு

09 May 2017

ஜிஎஸ்டி பதிவு முறை விரைவில் தொடங்கும் -மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

27 May 2015

மார்ட்மொபியை வாங்கியது ஸ்நாப்டீல்

02 Mar 2015

முதல்முறையாக 9 ஆயிரம் புள்ளிகளை தொட்டது 'நிப்டி'

04 Nov 2014

புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்; 28 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

26 Oct 2014

தொடர்ந்து 6-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு

21 Sep 2014

தங்கம் விலை சரிவு - ஒரே மாதத்தில் சவரனுக்கு 1352 ரூபாய் குறைந்தது

25 May 2014

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை தொட்டது

24 Apr 2014

23 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்: தொடர்ந்து நான்காவது நாளாக புதிய உச்சத்தை தொடும் பங்குச்சந்தைகள்