யோகாசனம்( yogasana )

யோகாசனம்( yogasana )
கட்டுப்பாடுகள்:

1.  கீழே குறிப்பிட்டுள்ளவர்கள் ஆசனங்களை செய்யக்கூடாது.

ஒரு வருடத்திற்குள் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்.

வயிற்றில் புண் உடையவர்கள் பிராணாயாமம். தியானம் மட்டும் செய்யலாம்

மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் கர்ப்பிணிகள்.

2. இவை தவிர கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் மட்டுமே யோகாசனங்கள் செய்ய வேண்டும்.

காலையில் தவிர மதியத்திலும் மாலையிலும் ஆசனங்கள் செய்யலாம். திட உணவு சாப்பிட்டு 3மணி நேரம் கழித்தும். திரவ உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தும் ஆசனங்கள் செய்யலாம்.


குளித்து விட்டு ஆசனங்கள் செய்யலாம். ஆசனங்கள் முடிந்த  பிறகு குளிப்பதற்கும் ஏதேனும் சாப்பிடுவதற்கும் கண்டிப்பாக 30 நிமிடங்கள் இடைவெளி தேவை

3 . ஆசனங்கள் செய்ய வேண்டிய நேரம்.:

காலை 3 மணி முதலே ஆசனங்கள் செய்யலாம். பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லக்கூடிய காலை 4.30 மணி முதல் 6 மணி வரை செய்வது மிகச் சிறப்பானது.

காலை எழுந்தவுடன் முதல் காரியமாக காலைக் கடன்களை முடிக்க வேண்டும். மலம் கழித்த பிறகுதான் ஆசனங்கள் செய்ய வேண்டும்.

மலம் கழித்த பிறகு சோப் கொண்டு சுத்தம் செய்து பிறகு பல் துலக்க வேண்டும். பிறகு அமர்ந்து மூன்று விரல்களை நாக்கில் முன் பின்னாகத் தேய்த்துசிறிதே தொண்டைக்குள் விரல்களை செலுத்த வேண்டும்.

இதனால் வயிற்றில் இருக்கும் பித்த நீரானது வாந்தியாக வெளியாகி விடும். நடு நெற்றியில் இருக்கும் சளியானது மூக்கில் இடம் பெயரும் இந்த சளியை மூக்கைச் அல்லது மூக்கின் வழியாக உள்ளுக்கிழுத்தோ வெளியேற்றிவிட வேண்டும். இதனைக் கடுமையாய் முயற்சி செய்ய வேண்டாம். கடுமையாய் முயற்சி செய்வதால் மூக்கின் உள்புறம் காயமடைந்து இரத்தம் வரலாம்.பிறகு 50மி.லி தண்ணீர் குடிக்க வேண்டும். அதன் பிறகு தான் யோகாசனப் பயிற்சிகளை துவக்க வேண்டும்.

யோகாசனங்களை வெறும் தரையில் செய்யக்கூடாது. தரையில் ஒரு விரிப்பு அல்லது ஒரு போர்வை விரித்து அதன்மீது மட்டுமே ஆசனங்களைச் செய்ய வேண்டும்.

4 . ஆசனங்கள்

இந்தப் பயிற்சி ஆறு அங்கங்களைக் கொண்டது

உடல் இலகுவாகும்பயிற்சி

தனுராசனம்  பக்கவாட்டில் உருளுதல் மட்டும்

விபரீதகரணி நாற்காலி உதவியுடன்

சாந்தி ஆசனம்

பிராணாயமம்

தியானம்

1 . உடல் இலகுவாகும் பயிற்சி

இது ஆசனங்களை செய்வதற்குமுன் பயிற்சியாகச் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரத்தின் முதல் இரண்டு நிலைகள் மட்டும் செய்யப்படுகிறது. இரண்டு கால்களையும் சோ்த்து நிற்க வேண்டும்.


மூச்சை இழுத்துக்  கொண்டு பின்புறம் முடிந்தவரையில் வளைய வேண்டும். மூச்சை விட்டு கொண்டே முன்புறம் வளைந்து காலைத் தொட முயற்சி செய்ய வேண்டும்.

மூச்சிகளை இழுத்துக்கொண்டும் விட்டுக் கொண்டும் முடிந்த வரையில் முன்னும் ,பின்னும் வளைந்தால் போதும் முழுமையாக வளைய வேண்டும். என்பது அவசியம் இல்லை இது ஒரு உடலை சூடேற்றும் பயிற்சி மட்டுமே அதனால் 100% சரியாக வளைய வேண்டியதில்லை.


இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் குப்புறப் படுக்க வேண்டும் பின்பக்கமாக உடலை வளைத்து இரு கைகளாலும் கணுக்கால்களைப் பெண்கள் கொலுசு அணியும் இடம் பிடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இடப்புறமும் வலப்புறமும் முடிந்தவரைஉடலை உருளச் செய்ய வேண்டும். இதனைச் செய்யும்போது மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை .இடது புறமும் ஆரம்பித்து வலதுபுறம் போய் திரும்ப இடதுபுறம் வரும் போது ஒன்று என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

 இப்படி 20 முறை உருண்டபிறகு காலை விட்டுவிட்டு குப்புறப் படுத்து ஒரு நிமிடம் பூரண ஒய்வு இப்படி மூன்று முறை விட்டுவிட்டு உருள வேண்டும்.

ஒரு வாரம் செய்தபிறகு நான்கு முறையாகவும் அதற்கு அடுத்த வாரம் ஆறு முறையாகவும் செய்ய வேண்டும்.

அதாவது வாரம் 20 முறையாக் கூட்டிக்கொண்டே  போய் 120 முறை உருள வேணடும். 120 எண்ணிக்கைக்கு மேல் உருண்டால் வயிற்றின் பூந்தசைகள் புண்ணாகி வயிற்று வலியால் அவதிப்படும் படியாகும்.

ஒரு முறை 20 எண்ணிக்கை உருண்ட பிறகு சுவாசம் சாதாரணமாக ஆன பிறகு மட்டுமே அடுத்த 20 எண்ணிக்கை தொடர வேண்டும். எந்த சமயத்திலும் மூச்சினைக் கட்டுப்படுத்த வேண்டாம். சுவாசம் இயற்கையாகவே இருக்கட்டும்.

பயன்கள்

பெரும் தொந்தி கரையும். சா்க்கரை வியாதி இருந்தல் குணமாகும் அல்லது கட்டுப்பாடுக்குள் வரும். சீரண மண்டலம்  நன்கு தூண்டப்படுவதால் சீரண சக்தி வலுவடையும். வாயுத் தொல்லை இல்லாது போகும்.


2 . விபரீதகரணி ஆசனம் நாற்காலி உதவியுடன்:

சர்வரோக நிவாரணி எனப்படும்  இந்த ஆசனம் எல்லா வித வியாதிகளையும் குணமாக்க வல்லது .சர்வாங்க ஆசனத்தின் அனைத்துப் பயன்களையும் இந்த ஆசனம் நல்கக் கூடியது.சர்வாங்க ஆசனம் செய்தால் அதற்கு மாற்று ஆசனமாக மச்சாசனம் செய்ய வேண்டும். ஆனால் இந்த விபாதிகரணி என்ற ஆசனத்திற்கு மாற்று ஆசனம் தேவையில்லை.


 ஒரு நாற்காலியை எடுத்துக் கொள்ள வேண்டும். மல்லாந்து  படுத்துக் கொண்டு நாற்காலியின் மேல் இரு கால்களையும் வைக்க வேண்டும்.  பிறகு குதிகால்கள் இரண்டையும் நாற்காலியில் அழுத்தி இடுப்பைத் தூக்கி நாற்காலியின் உட்காருமிடத்தின் முனையில் இடுப்பின் பெல்ட் அணியும் பாகம் பொருந்துமாறு வைத்து கால்களைத் தூக்கி முதுகு தாங்கியின் மேல் நேராக நீட்டிக் கொள்ள வேண்டும்.

 இப்போது உடல் ஏறத்தாழ ஒரு தலைகீழான நிலையை அடைந்திருக்கும். பின் கழுத்தும் இரு தோள்களும் தரையில் இருக்கும்.  உடலின் மீதி பாகங்கள் நாற்காலியின் உதவியுடன் 70 மதல் 80 டிகிரி கோணத்தில் சாய்ந்திருக்கும்.

கைகள் இரண்டும் நாற்காலியின் முன் இரண்டு கால்களை இறுகப் பிடித்திருக்க வேண்டும். மனதை தையராய்டு சுரப்பி இருக்கும் இடத்தில் நிலைநிறுத்தி ஏதாவதொரு மந்திரத்தினை  மனதால் செபிக்க வேண்டும். மந்திரமானது 15 சொற்களுக்குள் சிறிதாக இருக்க வேண்டும்


உ-ம் ஒம் நமசிவாய ஒம் நமோ நாராயணாய ஒம் சரவணபவாய நமஹ ஒம் விக்னேஷ்வராய நமஹஎன்றும்  செபிக்கலாம். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் 1,2,3 என்று 20 நிமிடங்கள் எண்ணத்தொடங்கலாம். சுவாசம் தன்னிச்சையாக இயங்கட்டும். சுவாசத்தை கட்டுப்படுத்த வேண்டாம்.


இந்த நிலையில் தொடர்ந்து 6 நிமிடம் முதல் 20 நிமிடம் வரையில் இருக்க வேண்டும். முதலில் 6 நிமிடங்களில் தொடங்கி நாளடையில் 20 நிமிடங்கள்  இந்த ஆசனம் செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட நேரம் ஆசனம் செய்தபிறகு மெதுவாக நாற்காலிருந்து இறங்கி மேல்புறம் பார்த்தபடி படுத்திருத்தல் வேண்டும். இப்போது விரல்களினக் பின்புறத்தால் தைராய்டு சுரப்பி இருக்கும் இடத்தைத் தொட்டுப் பார்த்தால் சூடாக இருக்கும். இதன்மூலம் விபரீதகரமணி ஆசனம் சரிவர செயப்பட்டுள்ளது என அறியலாம்.


6 நிமிடங்களுக்குக் குறைவாக இந்த ஆசனம் செய்தால் பலனளிக்காது.

பயன்கள்

இந்த ஆசனம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதால் எந்த நோயும் உடலைத்தாக்காது. தொடர்ந்து இந்த ஆசனம் செய்வதால் உடல் இளமையடையும் .தோற்றத்தால் வயதானாலும் செயலில்,எண்ணத்தில் ,உடல் ஆற்றலில் என்றும் இளமையோடு இருக்கலாம். தொடர்ந்து ஆசனங்கள் செய்து வரும் அன்பர்கள் இதனைப் பரிபூரணமாக உணர முடியும்.


3. சவாசனம்  சாந்தி ஆசனம்:

எல்லா ஆசனங்களையும் செய்த பிறகு சாந்தி ஆசனம் கட்டாயம் செய்ய வேண்டும். துணி விரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். கால்கள் இரண்டும் சிறிதே அகட்டி இருக்க வேண்டும். கைகள் உடலின் பக்கவாட்டில் உள்ளங்கை மேல்பக்கம் பார்க்க வைத்துக் கொள்ள வேண்டும். உடலின் எல்லா பாகங்களும் தளர்வாக இருக்க வேண்டும்.

இப்போது மனம் மட்டுமே வேலை செய்ய வேண்டும். உடலின் ஒவ்வொரு உறுப்பைக் கூப்பிட வேண்டும். உனக்கு பலம் அளித்துவிட்டேன் .இப்போது நீ ஒய்வெடு என்று சொல்ல வேண்டும். இதனை மனதால் மட்டுமே சொல்ல வேண்டும். உதடு அசையக்கூடாது. கால்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏ கால்களே உங்களுக்கு பலம் அளித்து விட்டேன் இப்போது நீங்கள் ஒய்வெடுங்கள்.

ஏ இடுப்பே மர்ம ஸ்தானமே உங்களுக்கு பலம் அளித்து விட்டேன் இப்போது நீங்கள் ஒய்வெடுங்கள். இப்படி ஒவ்வொரு உறுப்பாகச் சொல்லிக்கொண்டே உச்சந்தலை மூளை வரை வர வேண்டும். உடலில் ஏதாவதொரு பாகத்தில் நோய் இருந்தால் அந்த பாகத்தை மட்டும் 50 முறை அழைத்து பலம் அளித்ததாக சொல்ல வேண்டும். இப்படி 50 முறை சொல்லும்போதே அந்த பாகத்தில் வலி இருந்தால் அது குறைவதை மனதால் உணர முடியும்.

சாந்தி ஆசனம் செய்வதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் ஆகும் .அதற்குமுன் எழுந்து விடுவது முழுப் பலனையும் அளிக்காது. சாந்தி ஆசனம் செய்து முடித்த பிறகு எழுந்து கொள்ளுமுன் உடலின் அனைத்து பாகங்களையும் சிறிதே அசைத்து பிறகு இட வலமாக உடலை அசைத்து பிறகே எழுந்து கொள்ள வேண்டும்.

ஏதேனும் வியாதிகளுக்கு மருத்துவம் செய்து கொள்ளும்போது ஆசனப் பயிற்சியையும் சேர்த்து செய்வதால் நோய்  குணமாகும் காலம் துரிதாகும். உதாரணமாக 3 மாதத்தில் குணமடையும் நோய் ஒரு மாதத்தில் குணமடையும் மருந்து சாப்பிடும் காலம் குறையும்.

இரவு முழுவதும் தூங்காமலிருந்தாலும் உடல் உழைப்பிற்குப் பிறகும் பிரயாணத்திற்குப் பிறகும் சாந்தி ஆசனம் மட்டும் 10 நிமிடம் செய்து 30 நிமிடங்கள் மட்டும் தூங்கி எழுந்தாலும் போதும்  நமது உடல் ஒய்வு எடுத்த பலனைப் பெறும்.

4 . பிராணாயாமம்
இது மூச்சி பயிற்சியினை குறிக்கும் சொல்லாகும்.ஆசனங்கள் செய்ததன் மூலம் உடலின் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கங்கள் தூண்டப்படுகிறது.இப்போது உடலின் வளர் சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிசம் ஊக்கப்படுத்த வேண்டும்.

அதற்கு போதுமான பிராணவாயு தேவை. உடலின் இரத்தத்தில் அதிக பிராணவாயுவை சேர்ப்பதற்காகவே நாம் பிராணாயாமம் எனும் இந்த பயிற்சியை செய்கிறோம்.

பிராணாயாமம் என்றாலே பிராணனை வளர்த்தல் என்று பொருளாகும். திருமந்திரம் எனும் சைவதிருமுறையில் யோகசனங்கள், பிராணாயாமம் பறிறி விரிவாக சொல்லப்பட்டுள்ளது.

புறப்பட்டு புக்குத்திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நிர்மலமாக்கினால்
உறுப்பு சிறுக்கும்.உரோமம் கறுக்கும்
புறப்பட்டு போகான் புரிசடையோனே

வளியினை வாங்கி வயித்திலை அடக்கி {வளி-காற்று }பளிங்கொத்து காயம் பழிக்கினும் பிஞ்சாம்.

பத்மாசனம்,சுகாசனம்,வஜ்ராசனம் ஆகியவற்றிலோ
 அல்லது சாதணமாக உட்கார்ந்தபடியோ பிராணாயாமம் செய்யலாம்.முதுகெலும்பு நேராக இருப்பது அவசியம்.

முதலில் நுரையிரலிலுள்ள காற்றினை வெயியேற்றிட வேண்டும்.பிறகு வலது கையின் கட்டைவிரலால் மூக்கின் வலது நாசியை மூடீ இடது நாசியின் வழியாக காற்றினை உள்ளே இழுக்க வேண்டும்.மூக்கின் இடது நாசியை வலதுகையின் மோதிர விரலால்மூடி காற்றினை வலது நாசியின் மூலம் வேளியேற்ற வேண்டும்.எந்த நாசியின் மூலம் காற்று வெளியேற்றப்பட்டதோ அதே நாசியின் மூலம் காற்று உள்ளே இழுக்கப்பட வேண்டும்.மறு நாசியின் மூலம் வெளியேற்றப்பட வேண்டும்.

காற்றை உள்ளே இழுப்பதற்கும் வெளியேற்றுவதற்கும் குறிப்பிட்ட கால அவகாசம் பின்பற்றப்பட வேண்டும்.காற்றை ஏழு எண்ணிக்கை எண்ணும் வரை உள்ளே இழுக்க வேண்டும்.
நிதானமாக ஏழு எண்ணுவதற்கும் காற்று பூரணமாக நுரையீரலை நிரப்புவதற்கும் சரியாக இருக்க வேண்டும்.ஏழு எண்ணி இழுத்த காற்றை பதினான்கு எண்ணிக்கை எண்ணும் வரை வெளியேற்ற வேண்டும்.பதினான்கு எண்ணி முடிக்கும் போது காற்ற பூரணமாக நுரையீரலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டு நாசிகளிலும் காற்று மாறி,மாறி இழுப்பதும் விடுவதும் நடைபெற வேண்டும்.இதனை 10 முதல் 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.


5 . தியானம்:

யோகாசன பயிற்சியானது தியானம் செய்த பிறகுதான் முழுமையடைகிறது. உடலை வலுப்படுத்த ஆசனங்களும்,ஆன்மாவை வலுப்படுத்தி தன்னை அறிய தியானமும் உதவுகின்றது.பலஆன்மீக குருமார்களால் நூற்றுக்கணக்கான தியானங்கள் கற்று தரப்படுகின்றன. நீங்கள் முன்பே ஏதேனும் தியானம் பயின்றிருந்தால் அந்த தியானத்தை பிராணயாமத்திற்கு பிறகு 10 முதல் 20 நிமிடங்கள் செய்யவும்.

திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும்  ஒருவகை தியானம் இங்கு விவரிக்கப்படுகின்றது.

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவழி
உற்று உற்று நோக்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்கு பற்றாய் பரமன் இருந்திடம்
சிற்றம்பலம் என்று சேர்ந்து கண்டேனே


ஏதாவதொரு ஆசனத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.கைகள் இரண்டும் முழங்கால்களின் மேல் நீட்டி, விரல்களை சின் முத்திரையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சின்முத்திரையாவது கட்டைவிரலின் நுனியும் ஆளக்காட்டி விரலின் நுனியும் ஒன்றையொன்று தொட்டு கொண்டிருக்க வேண்டும்..மற்ற மூன்று விரல்களும் நேரே நீட்டி இருக்க வேண்டும்.கண்களை மூடி இரு கண்களாலும் இரு புருவங்களின் நேரே உற்று நோக்க வேண்டும்.அப்படி பார்க்கும்போதே விபரீதகரணி ஆசனத்தில் மனதால் சொன்ன மந்திரத்தை உதடு அசையாமல் மனதால் செபிக்க வேண்டும்.சுவாசம் தன்னிச்சையாக இருக்க வேண்டும்.


ஓரிரு நிமிடங்கள் மந்திரத்தை செபித்த பிறகுமனம் மந்திரத்திலிருந்து விடுபட்டு வெளியுலக விசயங்களை நினைக்க ஆரம்பித்து விடும். அதனை தடுக்க வேண்டாம்.சிறிது நேரத்திற்கு பிறகு மனம் தானாகவே மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பிக்கும்.இப்படியாக 10 நிமிடம் தியானம் செய்தால் ஆரம்பத்தில் 3 நிமிடங்கள் வரை மட்டுமே  மந்திரத்தை உச்சாடனம் செய்யமுடியும். நாளடைவில் 10 நிமிடங்களில் 9 நிமிடங்கள் மந்திரத்தை உச்சாடனம் செய்ய முடியும்..


தியானம் செய்யும் ஆரம்ப நாட்களில் புருவத்தின் இடையில் கண்களை மூடி பார்க்கும்போது இருட்டாக மட்டுமே இருக்கும்.நாளடைவில் தியானம் பழக,பழக நெற்றிப்பொட்டில் பச்சை,சிவப்பு,மஞ்சள்,நீலம் போன்ற நிறங்கள் தெரிய ஆரம்பிக்கும்.நினைவில் வையுங்கள் நாம் கண்களை மூடி இருக்கும் போது இந்த நிறங்கள் தெரியும்.கண்களை திறந்தால் இந்த நிறங்கள் தெரியாது.

தியானத்தின் இரண்டாம் நிலையில் புருவ மத்தியில் பசுமையான புல்வெளி ,கடற்கரை,பனிமூடிய மலை பிரதேசம் ஆகிய மனதை மகிழ்விக்கும் இயற்கை காட்சிகள் தெரிய ஆரம்பிக்கும். பெரிய பாம்பு,யானை போன்ற மிருகங்கள் ஆகியவையும் தெரியலாம்.

தியானத்தின் மூன்றாம் நிலையில் நம் இஷ்ட தெய்வங்களின் சந்நிதி பல்வேறு மகான்கள் குருமார்களின் உருவங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

தியானத்தின் நான்காம் நிலையில் இவை அனைத்தும் மாறி கோடி சூரிய பிரகாசமெனும் வெண்மையான,பளபளவென்ற விவரிக்க இயலாத சித்தர்கள் விளக்கு எரிவது என்று விவரிப்பதும் வள்ளலார் பெருமான் அருட்பெருஞ்சோதி என்று கூறுவதுமான ஒன்று .

நம் புருவ மத்தியில் சுடர் விட்டு பிரகாசிப்தை காண முடியும். எவ்வளவு விளக்கினாலும் விளங்க இயலாத,விவரிக்க இயலாத அனுபவம் ஒன்று ஏற்படும்.இதை அவரவர் அனுபவத்தினால் மட்டுமே உணர முடியும்.

தியானத்தின் நான்கு நிலைகளையும் எவ்வளவு நாட்களில் அடைய முடியும் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.ஆசனம்,பிராணயாமம்,தியானம் போன்ற வரியைில் சொல்லி கொடுத்தபடி தொடர்ந்து பயிற்சி செய்து வர வேண்டும்.முதலில் நோயற்ற வாழ்வு சாத்தியமாகி விடும்.அதன்பிறகு இறை சக்தியின் விருப்பப்படி அமையட்டும்.


எச்சரிக்கை:

யோகாசனங்களை குருவிடம் நேரிடையாக மட்டுமே கற்க வேண்டும்.இந்த கையேட்டின் உதவிக்கொண்டு தானாகவே செய்வதை தவிர்க்கவும்.  
https://goo.gl/3e8g5k


21 Aug 2014

பணிவோம், உயர்வோம்!

19 Jun 2014

மனஅழுத்தத்தை விரட்டி எப்போதும் சந்தோஷமாக இருக்க சில டிப்ஸ்

23 Mar 2014

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் குண்டாவது ஏன்

15 Mar 2014

முதுமை பற்றிய பொன் மொழிகள்

09 Mar 2014

சுவாமி விவேகானந்தர் பொன் மொழிகள்

09 Mar 2014

பொன் மொழிகள்

23 Jan 2014

விரதம் என்றால் என்ன?விரதம் இருப்பதற்கான காரணம் என்ன?

15 Dec 2013

முதுமையின் பொன் மொழிகள்

19 Nov 2013

யோகாசனம்( yogasana )

29 Oct 2013

தீபாவளி --- சிந்தனைக்குச் சில வினாக்கள்!!