' பாவிகள்!' சு.செந்தில்ராஜ் ஆசிரியர், தமிழ்குறிஞ்சி.

' பாவிகள்!'
சு.செந்தில்ராஜ்
ஆசிரியர்,
தமிழ்குறிஞ்சி.
ஆதவன்  மேற்கில்  மறைந்து  கொண்டிருந்தான்.  டிசம்பர்  மாதத்துக்  குளிர்  சில்லென்று  இறங்கிக்  கொண்டிருந்து.  நான்  அந்தக்  குளக்கரையின்  மீது  நடந்து  கொண்டிருந்தேன்.  குளிர்  கலந்த  காற்று  மென்மையாய்  முகத்தை  வருடிச்  சென்றது.

இடது  பக்கம்  குளத்து  நீர்  சலசலத்தது.  வலது  பக்கம்  கண்ணுக்கெட்டிய வரை  பசுமையாய்  நெல்  வயல்கள்.  அந்த  ரம்மியமான  சூழ் நிலையை  அனுபவித்தவாறு  நடந்து  கொண்டிருந்தேன்.

வலியால்  முனகும்  ஒரு  பெண்ணின்  வேதனைக்  குரல்   என்னைக்  கலைத்தது.  காதுகளை  கூர்மையாக்கினேன்.  அந்த  முனகல்  சப்தம்  குளத்துக்குள்  கரையை  ஒட்டியது  போல்  தனியாய்  நின்று கொண்டிருந்த  அந்த  பனைமரம்

நான்   பனைமரத்தை  நெருங்கிப்   பார்த்த போது  மங்கலான  வெளிச்சத்தில்  ஒரு  பெண்  அலங்கோலமாய்க்  கிடப்பது  தெரிந்தது.

நான்   அவளை  நெருங்கி  குனிந்து  முகத்தைப்  பார்த்தேன்.  அதிர்ந்தேன்.  அது  கமலா!  எனது  பக்கத்து  வீட்டுப்  காலையில்  கூட  நான்  கல்லூரிக்குப்  புறப்பட்டுப்  போனபோது  தலைவாரிக்  கொண்டிருந்தவள்  'காலேசுக்கு  இப்பத்தான்  போறீங்களா?'  என்று  சிரிப்போடு  கேட்டாள்.

இப்போது  அலங்கோலமாய்,  கசக்கி  எரியப்பட்ட  மலர் போல்  கிடக்கிறாள்.  நான்  அவளது  நிலையைப்  பார்த்ததுமே  ஏதோ  விபரீதம்  நடந்திருக்கிறது  என்பதை  புரிந்து  கொண்டேன்.அவளைச்  சுற்றி  மாட்டுச் சாணம்  இறைந்து  கிடந்தது.  சாணக் கூடை  சற்று  தூரத்தில்  கிடந்தது.

நான்  தரையில்  அமர்ந்து  அவளை  மெதுவாகத்  தூக்கி  என்  மடிமீது  கிடத்திக் கொண்டு,  அவளது  காதருகே  குனிந்து  மெதுவாய்  'கமலா'  என்றழைத்ததும்  கண்களை  சிரமத்தோடு  திறந்தாள்.

என்  முகத்தைப்  பார்த்ததும்  முகத்தில்  அறைந்து  கொண்டு  அழத் தொடங்கினாள்.  அவள்  அழுது  ஓயும்  வரை  பேசாதிருந்தேன்.  பிறகு  மிருதுவாய்  "கமலா  என்னாச்சுமா?"  என்றதும்  விம்மல்களினூடே  "என்னை...  என்னை  மேலத்தெரு  கோடங்கி  பெரியசாமி  நாசமாக்கிட்டான்..."  என்றாள்.

எனக்குப்  புரிந்து  விட்டது.  சாணம்  பொறுக்க  வந்த  இடத்தில்  தனிமையயும்,  மங்கிய  இருளையும்  கேடாங்கி  தனக்கு  சாதகமாய்ப்  பயன்படுத்திக்  கொண்டு  இவளை  சீரழித்திருக்கிறான்.

எனக்கு  என்ன  செய்வது?  அவளுக்கு  எப்படி  ஆறுதல்  சொல்வது  என்று  புரியவில்லை.

"சரி  எழுந்திரு  வீட்டுக்குப்  போகலாம்"  என்றேன்.

"இல்லை... நான்  வீட்டுக்கு  வரலை"  என்றழுதாள்.

"வீட்டுக்கு  வராம  என்ன  செய்யப்  போறே  எழுந்திரு  முகத்தைக்  கழுவிக்கோ"

சற்று  நேரம்  அமைதியாய்  இருந்தாள்.  பிறகு  "எனக்கொரு  சத்தியம்  பண்ணிக் கொடு"  என்று  கையை  நீட்டினாள்.

"நான்  என்ன  செய்யனும்  சொல்லு?"

"இங்கு  நடந்ததை  யார் கிட்டேயும்  சொல்ல  மாட்டேன்னு  சத்தியம்  பண்ணிக்  குடு"

நான்  இறுக்கமாய்  அவள்  கரத்தைப்  பற்றினேன்.  அவள்  என்னைப்  பார்த்து  கை கூப்பினாள்.  நன்றியா?  வேண்டுகோளா?  என்று  என்னால்  புரிந்து   கொள்ள  முடியவில்லை.

என்னைப்  பற்றிக் கொண்டு   மெதுவாக  எழுந்தாள்.  ஆடைகளை  சரி செய்து  கொண்டு  முகத்தைக்  கழுவினாள்.  நான்  இருட்டில்  தேடி  அவளது   சாணக்  கூடையை  எடுத்துக்  கொடுத்தேன்.  வாங்கிக் கொண்டு  தள்ளாடியவாறு   நடக்கத்  தொடங்கினாள்.  நான்  அவள்  செல்வதையே  வெறித்துப்  பார்த்துக்  கொண்டிருந்தேன்.

நான்  நீண்ட  நேரம்  கழித்து  என்  அறைக்குத்  திரும்பிய போது  அவளது  வீட்டின்  முன்  ஒரு   கும்பல்  நின்று  கொண்டிருந்தது.

"கருக்கல்  நேரத்துல  பூவச்சு  சிங்கரிச்சுக்கிட்டு  சாணி  பொறுக்க  போகாதீங்கனு  சொன்னா  இந்த  கொமருக கேட்டாத்தானே.  இப்போ  அந்த  ஒத்தை  பனை மரத்துகிட்ட  வழுக்கி  விழுந்து  பயந்து  போய்  வந்திருக்கா . அங்கன தேன்  நம்ம  கருத்தம்மா  கொளத்துல  விருந்து  செத்தா.  இப்போ  அவதேன்  வந்து  புடிச்சுக்கிட்டா.  இப்போ  ஜொரத்துல  என்னை  விட்டுருனு  பொலம்பறா"

கமலா  ஏன்  இப்படி  பொய்  சொன்னாய்?  உங்கப்பன்  அருவாளை  தூக்கிட்டு  ஓடுவான்னு  பயந்து  போய்  பொய்  சொன்னியா?  இல்லை   கோடங்கி  பெரியசாமி  கெடுத்துட்டான்னு  சொன்னா  யாரும்  நம்பமாட்டாங்கன்னு  பொய்  சொன்னியா?  எனக்குள்  கேள்வி  கேட்டுக்  கொண்டு  விடைகிடைக்காமல்  என்னறைக்குச்  சென்றேன்.

மறு நாள்  காலை  நான்  கல்லூரிக்குப்  புறப்பட்ட  போது  எப்பொழுது  பூவாய்ச்  சிரித்துக்  கொண்டு  'காலேசுக்குப்  போறீங்களா?'  என்று  கேட்கும்  கமலாவைக்  காணவில்லை.  அவளது  அப்பன்  தான்  கவலையோடு  திண்ணையில்  அமர்ந்திருந்தான்.

நான்  மெதுவாய்  அவனிடம்  "ஏங்க  ரொம்ப  முடியலேனா  கமலாவை  ஆஸ்பத்திக்கு  கூட்டிட்டு  போகலாமீல"  

"ஏந்தம்பி  நீங்க  வேற  புரியாமப்  பேசறீங்க.  இந்த  ஜொரம்  டாக்குட்டருக்கெல்லாம்  கட்டுப்படாது.  அவளை  பேயடிச்சிருக்குது.  ராத்திரிக்கி  கோடாங்கிய  கொண்டு  வந்து  அடிச்சா  சரியாப்  போயிரும்"  என்றவனின்  அறியாத்தனத்தை  எண்ணி  வருந்தினேன்.

அன்று  இரவு  நான்  அறைக்குத்  திரும்பிய  போது  கோடங்கியின்  உடுக்கைச்  கப்தம்  கேட்டது.  கூடவே  பெரியசாமியின் ஓங்காரக்  குரல்  என்  செவிகளைக்  கிழித்தது.  பெண்கள்  பயபக்தியுடன்   அமர்ந்திருந்தார்கள்.

பெரியசாமி  "ஓடீரு  கருத்தம்மா....  ஓடீரு....  உனக்கு  சேவலறுத்து  பொங்கல்  படையல்  போடச் சொல்றேன்...  இந்தப்  பொண்ணை  விட்டுப்  போயீரு..."  என்று   ராகம்  போட்டுப்  பாடிக்  கொண்டிருந்தான்.

சிரிது  நேரத்தில்  சடார்,  சடார்  என்று   அடிக்கும்  சப்தம்.  நான்  பொறுமையிழந்து  வீட்டிற்குள்   எட்டிப் பார்த்தேன்.  கமலாவை  குளிர்ந்த  நீரில்  குளிப்பாட்டி  அப்படியே  ஈரத்துணியோடு  அமர்த்தியிருந்தார்கள்.  கமலா  சுவறில்   சாய்ந்திருந்தாள்.  கண்கள்  மூடியிருந்தன.  குளிரில்  அவளது  கை,  காலெல்லாம்   நடுங்கிக்  கொண்டிருந்தது.  பெரியசாமி  வேப்பந்தலையால்  அவளைத்  திரும்பத்  திரும்ப  அடித்துக்  கொண்டிருந்தான்.

எனக்குள்  ஆத்திரம்  பொங்கியது.  பாவி!  அநியாயமா  ஒன்றுந்  தெரியாத   பொண்ணைக்  கெடுத்துட்டு  பேய்  விரட்டரேன்  பேர் வழினு  இப்படி  அடிக்கிறானே!  ஓரு  கணம்  உண்மையைச்   சொல்லி  விடலாமா  என்று  எண்ணினேன்.  அவளுக்குச்  செய்து  கொடுத்த  சத்தியம்  தடுத்தது.  அவள்  என்னை  நோக்கி   கை கூப்பியது  கண் முன்னே   நிழலாடியது.

கடுமையான  ஜீரத்தோடு  அவளைக்  குளிப்பாட்டி  ஈரத் துணியோடு  வைத்திருந்தாலும்,  பெரியசாமியின்  அடிகளாலும்  கமலாவுக்கு  ஜன்னி  கண்டது.

பெரியசாமி  ஓங்காரமாய்  "கருத்தம்மா  எதுங்குறா....  எதுங்குறா...."   என்று  சப்த  மிட்டான்.  கமலா  அப்படியே   மயங்கிச்  சாய்ந்தாள்.  கூட்டம்  பேய்  ஓடி விட்டதாக  முடிவு  கட்டியது.

நான்  மீண்டுமொரு   முறை  உண்மையைச்  சொல்லி  விடலாமா  என்று   எண்ணினேன்.  நான்  சொல்வதை  இங்கு  யாரும்  நம்பப்  போவதில்லை.  பெரியசாமியின்  சொல்லுக்கு  இங்கே  மதிப்பதிகம்.   அவன்  பெரிய  மந்திரவாதி,  பக்திமான்,  என்று  இந்த  மடையர்கள்  நம்புகிறார்கள்.  மேலும்,  நான்   பலநூறு மைல்களுக்கு  அப்பாலிருந்து  இங்கு  படிக்க   வந்தவன்.  விடுதியில்  இடம்  கிடைக்காததால்  இந்த  கிராமத்தில்  தங்கி  இருக்கிறேன்.  இந்த   சூழ்நிலையில்  நான்  உண்மையைச்  சொல்லப்  போனால்  ஊரே  எனக்கெதிராகத்  திருப்பிலிடும்.

நான்   எதுவும்  செய்ய  இயலாதவனாய்  நின்றேன்.   மேலும்  அங்கிருக்கப்  பிடிக்காமல்   கனத்த   இதயத்தோடு  திரும்பினேன்.

மறு நாள்  விடிகாலையில்   ஒப்பாரிச்சத்தம்  கேட்டு  கமலாவின்  வீட்டுக்கு  ஓடினேன்.  கமலா  விழிப்பே  இல்லாத  நித்திரையில்  இருந்தாள்.  பாவிகள்!  இநியாயமாய்  தங்கள்   மூடத்தனத்தால்  ஒரு  இளம் பெண்ணைக்  கொன்று  விட்டார்கள்  பொங்கி  வந்த  கண்ணீரை  என்னால்  தடுக்க  முடியவில்லை.  அவளுக்கு  என்னால்  இரண்டு  சொட்டு  கண்ணீரை  மட்டுமே  கொடுக்க  முடிந்தது.

தொடர்ந்து  அங்கு  நிற்க  முடியாமல்  திரும்பிய  போது  என் மனசாட்சி  உறுத்தியது.  'பாவி  இந்தக்  கொலைக்கு   நீயும்  தானே  உடந்தையாக  இருந்தாய்  அழுதேன்!  அழுவதைத்  தவிர  இந்த  மூடர்கள்  மத்தியில்  தனிமனிதனாய்  என்னால்  வேறு  என்ன  செய்ய முடியும்.


03 Jun 2013

' பாவிகள்!' சு.செந்தில்ராஜ் ஆசிரியர், தமிழ்குறிஞ்சி.

10 Apr 2013

சார்! கார்த்துடைக்கனுமா?

07 Apr 2013

மலரும் முள்ளாகும்

06 Mar 2013

கைக்காசு,,,-விமலன்

19 Jul 2012

பரவால்ல விடுங்க பாஸூ… - சதங்கா

19 Jul 2012

இடுகாடு - -நிலாரசிகன்.

12 Mar 2012

நீ, நான், நேசம் - எம்.ரிஷான் ஷெரீப்

02 Feb 2012

நம்பிக்கை இல்லாத நட்பு - ஈஸ்வர்

15 Jan 2012

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - எம்.ரிஷான் ஷெரீப்

27 Dec 2011

மைனர் - ரேகா ராகவன்